இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி 2008 ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஓய்வு பெற்றாா். அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகிக் கொண்டார். அதன் பின்னா் இப்போது பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
இதற்கிடையே, கங்குலி மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளதாகவும், இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு கங்குலி தன்னை அழைத்தார். அதற்கு தான் ஒப்புகொண்டுள்ளேன். சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
சவுரவ் கங்குலி அரசியலில் களமிறங்க போவதாகவும், பாஜகவில் இணைய போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் கங்குலி பாஜக தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவாா் என பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் உடனான கங்குலியின் சந்திப்பு அதற்கு தீனி போடுவது போல் அமைந்துள்ளது.