சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா சுய தனிமைக்கு சென்ற தலைமை பூசாரி

by Nishanth, Dec 31, 2020, 10:02 AM IST

சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி சுயதனிமைக்கு சென்றார். இதனால் அவருக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பூஜைகளை நடத்தினார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. இதன் பின்னர் கடந்த 27 முதல் 29 ம் தேதி வரை 3 நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காகக் கோவில் நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்லலாம்.

கடந்த மண்டலக் காலத்தில் பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனை நடத்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியிருந்தது. இந்நிலையில் சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் இன்று முதல் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை நடத்தி நெகட்டிவ் முடிவு வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே சபரிமலையில் மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மேல்சாந்தி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 7 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மேல்சாந்தி ஜெயராஜுக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு தான் நடை திறந்து பூஜைகளை நடத்தி வருகிறார். சபரிமலை கோவில் பூசாரிகளுக்கும் கொரோனா பரவி வருவதைச் சபரிமலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை