வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதா ஆதரவா? எதிர்ப்பா? குழப்பிய பாஜக உறுப்பினர்

by Nishanth, Dec 31, 2020, 15:30 PM IST

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டத்திற்கு எதிராகச் சிறப்புச் சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றக் கேரள அரசு தீர்மானித்தது.

கடந்த 23ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் கேரள கவர்னர் அதற்கு அனுமதி மறுத்த நிலையில், இன்று கவர்னரின் அனுமதியுடன் சிறப்புச் சட்டசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவர் பேசுகையில், வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இந்த சட்டம் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

பினராயி விஜயன் பேசி முடித்த பின்னர் காங்கிரஸ், கேரளா காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாஜக உள்படக் கட்சித் தலைவர்கள் பேசினர். பாஜக சார்பில் கேரளாவில் ராஜகோபால் என்ற ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். அவர் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். ராஜகோபால் தவிர மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். இறுதியில் சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தீர்மானத்தை நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார். ஆனால் பாஜக உறுப்பினர் ராஜகோபால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார்.

இதையடுத்து தீர்மானம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அறிவித்தார்.பாஜகவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக உறுப்பினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பின்னர் ராஜகோபால் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்புக்கு நானும் உடன்படுகிறேன். இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக பாஜக எம்எல்ஏவே பேசியது அக்கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேரள பாஜக தலைவர்கள் வெளிப்படையாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

You'r reading வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதா ஆதரவா? எதிர்ப்பா? குழப்பிய பாஜக உறுப்பினர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை