மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி கடந்த 5 வாரங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை நிறுத்துவதற்காக மத்திய அரசு பலமுறை விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியதால் தற்போதும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்த சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி சில மாநிலச் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கேரளாவிலும் சிறப்புச் சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புச் சட்டசபையைக் கூட்ட முதலில் கேரள கவர்னர் அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 23ம் தேதி சட்டசபை கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர் அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து கவர்னருக்கும், கேரள அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் பின்னர் கடந்த 31ம் தேதி சட்டசபை கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அதற்கும் அவர் அனுமதி மறுத்தார். இதையடுத்து கேரள சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் கவர்னரை நேரில் சந்தித்து கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதன் பிறகே சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி கொடுத்தார்.
இதையடுத்து கடந்த 31ம் தேதி சட்டசபை கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டசபையில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மான நகல் கவர்னரிடம்வழங்கப்பட்டது. வழக்கமாக இத்தகைய தீர்மானங்களை மத்திய அரசுக்கு கவர்னர்கள் அனுப்பி வைப்பது தான் வழக்கமாகும். ஆனால் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் போவதில்லை என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவரும் கருதுவது போல எனக்கும், கேரள அரசுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. சிறப்புச் சட்டசபை கூடுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதில் சில சந்தேகங்கள் இருந்ததால் தான் முதலில் கூட்டத்திற்கு அனுமதி மறுத்தேன். தற்போது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் போவதில்லை. மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கேரள அரசு என்னிடம் கூறவும் இல்லை என்று அவர் கூறினார்.