கேரளாவில் பறவைக்காய்ச்சல் : நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பீதி

by Balaji, Jan 4, 2021, 19:35 PM IST

கேரளாவில் உள்ள வாத்துப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப் பண்ணைகளில் மீண்டும் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் வட்டார கோழிப்பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்துப்பண்ணைகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள சில வாத்துப்பண்ணைகளில் வாத்துகள் திடீரென்று இறந்தன. இதையொட்டி கால்நடை பராமரிப்புத்துறை, இறந்த வாத்துக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் முடிவில், 8 மாதிரிகளில் 5 ல் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து கேரள கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வாத்துப்பண்ணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் ஏற்கனவே இறந்துள்ளது. நோய் பரவாமல் தடுக்க, ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள பண்ணைகளில் இருக்கும் சுமார் 36 ஆயிரம் வாத்துக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதி தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்து குஞ்சுகள், வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சலால் இறப்புகள் பதிவாகும் பகுதிகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் மனிதர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை அடையாளம் காணும் பணிகளை கேரள சுகாதாரத்துறையினர் தொடங்கியுள்ளனர். நாமக்கல் வட்டாரத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சரிபாதி அதாவது சுமார் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.

இது தவிர பிராய்லர் கோழிகளும் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது கோழி மற்றும் முட்டை விற்பனையை பாதிக்குமோ என்று நாமக்கல் பகுதி பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். கேரளாவிற்கு சென்று திரும்பும் வாகனங்கள் மூலம் இங்குள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பண்ணை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் வானங்கள் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே பண்ணைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

You'r reading கேரளாவில் பறவைக்காய்ச்சல் : நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பீதி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை