கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் இன்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை விஜய்யின் மாஸ்டருக்கு மட்டுமே திறக்கப்படும்

by Nishanth, Jan 5, 2021, 10:49 AM IST

கேரளாவில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தும் பல்வேறு காரணங்களால் இன்று எந்த தியேட்டரும் திறக்கப்படவில்லை. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் 13ம் தேதி முதல் தான் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படும் என கூறப்படுகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் அனைத்து சினிமா தியேட்டர்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் லாக் டவுன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட ஒரு சில மாநிலங்களில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனால் புதிய படங்கள் எதுவும் இல்லாததால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. முதலில் தியேட்டர்களில் பாதி இருக்கைகளில் மட்டுமே ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முழு அளவில் தியேட்டர்களில் ஆட்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலகினர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இன்று (5ம் தேதி) முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.

மேலும் தியேட்டர்களை திறக்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும், 50 சதவீதம் பேரை மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும், முகக் கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைப்பிடிப்பது உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆனால் அரசு அனுமதி அளித்தும் இன்று தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று தியேட்டர் உரிமையாளர்களும் கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 9 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும், எனவே தங்ககளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டி இருப்பதால் பாக்கி தொகையை தராமல் புதிய படங்களை கொடுக்க முடியாது என்று சினிமா வினியோகஸ்தர்களும் கூறியுள்ளனர். இதையடுத்து இன்றும், நாளையும் சினிமா வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் 13ம் தேதி முதல் கண்டிப்பாக கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

You'r reading கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் இன்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை விஜய்யின் மாஸ்டருக்கு மட்டுமே திறக்கப்படும் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை