கேரளாவில் வாத்து மற்றும் கோழிகளுக்கு மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்துக்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான, குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் பாலக்காடு தென்காசி மாவட்டம் புளியரை உள்ளிட்ட பல பகுதிகளில் கால்நடைத்துறை மூலம் பரவி காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் கேரளாவில் இருந்து வாத்து கோழிகள் ஏற்றி வரும் லாரிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
மற்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் புளியரையில் இதற்காக தலா 5 பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடை மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.