முதன்முறையாக இந்தியாவிடம் அரிசி கொள்முதல் செய்ய வியட்நாம் தொடங்கியுள்ளது. உலகளவில் அரிசி உற்பத்தியில் பல ஆண்டுகளாக இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து வரிசையாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அரிசியை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, உலகளவில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாமில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில், இந்தியாவிடம் அரிசி கொள்முதல் செய்ய வியட்நாம் தொடங்கியுள்ளது. வியட்நாம் மட்டுமல்லாது, இந்தியாவிடமிருந்து அரிசி கொள்முதல் செய்ய தாய்லாந்தும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அரிசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ராவ் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் இந்தியா வர்த்தகர்களுக்குச் சுமார் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்யும் ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த 70,000 டன் அரிசியை ஒரு டன்னுக்குச் சராசரியாக சுமார் 310 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய உள்ளது. முதல் முறையாக வியட்நாம் நாட்டிற்கு அரிசியைப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.