மினி கிளினிக் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக இப்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நியமனம் குறித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை கடந்த டிசம்பர் 5 ல் வெளியிடப்பட்டது. இதில் செவிலியருக்கு ரூ.14, ஆயிரம் , மருத்துவ உதவியாளர்கள் ரூ.6ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக்களுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் டிசம்பர் 15ம் தேதி பணியாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இதன்படி தனியார் ஏஜென்சி ஒன்றின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்படி ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்பட மாட்டாது. . கொரோனா தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியான ஒன்றாக5t5 இருக்க முடியாது. எனவே மருத்துவ பணியாளர்கள் செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பாக வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால், கால அவகாசம் அளிப்பதாக கூறிய நீதிபதிகள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தற்போதைய நிலையே தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மினி கிளினிக்கிற்கு இனிமேல் பணியாளர்கள் நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..