என்னை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் நள்ளிரவில் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரின் திட்டம் என்று பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா கூறினார்.மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அஹானா கிருஷ்ணா. ஞான் ஸ்டீவ் லோப்பஸ், லூக்கா, பதினெட்டாம் படி உட்பட பல படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணகுமார் மலையாளத்தில் பிரபல நடிகர் ஆவார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தெய்வ திருமகள், சத்தியம், முகமூடி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு 10 மணியளவில் இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். கேட்டைத் தாண்டி உள்ளே குதித்த இவர், கதவை திறந்து வீட்டுக்குள் நுழையவும் முயன்றார். இதில் நடிகை அஹானா கிருஷ்ணாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். இது குறித்து உடனடியாக அவரது தந்தை நடிகர் கிருஷ்ண குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பசலுல் அக்பர் (27) என தெரியவந்தது. விசாரணைக்கு பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை அஹானா கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது: நள்ளிரவில் அந்த வாலிபர் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றது எங்களுக்கு மிகுந்த பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உடனடியாக நாங்கள் கதவை மூடியதால் வேறு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. கேட்டை தாண்டிக் குதித்து உள்ளே நுழைந்த அவர், என்னுடைய ரசிகர் என்றும், என்னைப் பார்க்க வந்ததாகவும் முதலில் கூறினார். நாங்கள் கேட்டை திறக்க மறுத்த போதிலும் அவர் தாண்டி உள்ளே குதித்தார். வீட்டுக் கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைய முயற்சித்தார். போலீசுக்கு தகவல் தெரிவித்தவுடன் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து கொண்டு சென்றனர். போலீசிடம் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும், அதற்காகத் தான் என்னுடைய வீட்டுக்கு வந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.வழக்கமாக சினிமாவில் தான் இது போன்ற காட்சிகளை நான் பார்த்துள்ளேன். நேரடியாக நடந்த போது நாங்கள் மிகவும் பயந்து விட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.