கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு...!

by Nishanth, Jan 7, 2021, 17:20 PM IST

கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து 1 லிட்டருக்கு ₹ 100 வரை உயர்த்தப்படும்.கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை அரசு மதுபான விற்பனைக் கழகம் தங்களுடைய சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அரசு மதுபான விற்பனை கழகத்திற்குக் கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லரை மது விற்பனைக் கடைகள் உள்ளன.

இது தவிர நுகர்வோர் கூட்டமைப்பு சார்பிலும் 25க்கும் மேற்பட்ட பீர் பார்லர்கள் மற்றும் மதுக் கடைகள் உள்ளன. கேரளாவில் கிறிஸ்துமஸ், புது வருடம், ஓணம், சித்திரை விஷு உள்படப் பண்டிகை காலங்களில் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அரசு மதுபான விற்பனைக் கழகத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. 6 மாதங்களுக்குப் பின்னர் தான் மதுக் கடைகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன. மது பார்களும் வழக்கம் போலத் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அரசு மதுபான விற்பனைக் கழகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே மது விலையை அதிகரிக்க வேண்டுமென்று மது தயாரிப்பாளர்கள் கேரள அரசுக்குக் கடந்த பல மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மது தயாரிப்புக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. விரைவில் மது விலை உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலைக் கேரள கலால் துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். இதன்படி ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக ₹ 100 வரை விலை உயர்த்தப்படும்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்