கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 2 ஆம் தேதி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சார்ந்த பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஸ்டாலின் நீங்கள் அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் என்பது தெரியும் உங்கள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது இங்கிருந்து வெளியேறுங்கள் என்று சொன்னார்.
இதைத் தொடர்ந்து அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்றபோது அவர் மீது திமுகவினர் தாக்கியதாக அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டியிருந்தார்.பூங்கொடி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த முனி, ராமன், மகேஸ்வரி ஆகியோரும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் மனு செய்திருந்தார்.இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையம் புகாரில் கண்டுள்ள சம்பவம் குறித்துத் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் 15 நாட்களுக்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ். பி அருளரசு ஆகியோர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர்.