கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சபாநாயகரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோர் சில முக்கிய கேரள அரசியல் பிரமுகர்களுக்காக வெளிநாடுகளுக்கு டாலர் கடத்த உதவியதும் சுங்க இலாகா விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சுங்க இலாகா தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்காகவும் துபாய் உள்பட சில நாடுகளுக்குக் கேரளாவில் இருந்து டாலர் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது.
ஆனால் அதற்கு முன்பாக இந்த புகார் தொடர்பான உண்மைத் தன்மையை அறிவதற்காகச் சபாநாயகரின் தனிச் செயலாளரான ஐயப்பனின் என்பவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கூறி 3 முறை ஐயப்பனுக்கு சுங்க இலாகா நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் அவர் முதலில் ஆஜராக மறுத்தார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய உதவியாளரிடம் விசாரணை நடத்த முடியாது என்று சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறினார்.ஆனால் கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுங்க இலாகா ஐயப்பனுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நேற்று அவர் கொச்சியில் உள்ள சுங்க இலாகாவின் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவரை சுங்க இலாகா விடுவித்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் டாலர் கடத்தல் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன. இதையடுத்து உதவி சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற்று அதன்படி விரைவில் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சபாநாயகரிடம் விசாரணை நடத்தினால் அது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.