கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்கள் திறப்பு இல்லை... மாஸ்டர் படமும் ரிலீஸ் ஆகாது

by Nishanth, Jan 9, 2021, 20:31 PM IST

கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கொச்சியில் இன்று நடந்த சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் ரிலீசாக வாய்ப்பில்லை.கேரளாவில் கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சில தியேட்டர்களில் உடனடியாக பராமரிப்பு பணிகளும் தொடங்கின. ஆனால் ஏற்கனவே 10 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பராமரிப்பு பணிகளுக்காக பெரும் தொகை செலவாகும் என்பதால் உடனடியாக தியேட்டர்களை திறக்க முடியாது என்று சில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர். மேலும் அரசு நிவாரணம் தந்தால் மட்டுமே தியேட்டர்களை திறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனாவுக்கு முன்பு படங்களை தியேட்டர்களுக்கு கொடுத்ததன் மூலம் லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதால் அதைத் தந்தால் மட்டுமே புதிய படங்களை தியேட்டர்களுக்கு கொடுக்க முடியும் என்று சினிமா விநியோகஸ்தர்களும் கூறினர். இதனால் தியேட்டர்களை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் விஜய்யின் மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாக இருப்பதால் அன்று முதல் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் கேரள சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று கொச்சியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தியேட்டர்களை உடனடியாக திறப்பதால் எந்த பலனும் இல்லை என்று பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். விஜய்யின் மாஸ்டர் படம் 13ம் தேதி ரிலீஸ் ஆனாலும் அதன் பின்னர் புதிய படங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் தியேட்டர்களை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் கேரள அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்