தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை அவரது உறவினர்களும் நண்பர்களும் அவ்வப்போது சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கக் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 9 மாதங்களாகக் காணொலி காட்சி மூலம் மட்டுமே கைதிகளிடம் உறவினர்கள் பேசி வந்தனர். தற்போது கொரோனா கால கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இயல்பான சூழ்நிலை மாறிக் கொண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு பலதரப்பினரும் கைதிகளைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த அரசு கைதிகளைச் சந்திக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வரும் பொங்கல் முதல். ஜனவரி 14ம் தேதி முதல் சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க உறவினர்களுக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சிறைவாசிகளைச் சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.