வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் சட்டசபை கூட்டத்திற்கு பின் கேரள சபாநாயகரிடம் விசாரணை

by Nishanth, Jan 10, 2021, 11:37 AM IST

வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் கேரள சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. சபாநாயகரிடம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதால் சுங்க இலாகா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கும்பல் கேரளாவிலிருந்து சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காக வெளிநாட்டுக்கு டாலர் கடத்த உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் யார், யாருக்காக டாலர்கள் கடத்தப்பட்டது என்ற விவரம் தெரியவந்தது.

இதில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. ஆனால் சபாநாயகர் பொறுப்பில் உள்ளவரிடம் விசாரணை நடத்துவதற்கு சட்ட சிக்கல் இருந்ததால் அது தொடர்பாக சட்ட ஆலோசனை பெற சுங்க இலாகா முடிவு செய்தது. ஆனால் அதற்கு முன்பாக இந்தப் புகார் தொடர்பான உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக சபாநாயகரின் உதவியாளரான ஐயப்பன் என்பவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா நடவடிக்கை எடுத்தது. ஆனால் 3 முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுத்தார். இறுதியில் அவரை கைது செய்ய சுங்க இலாகா நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐயப்பன் சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் 9 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. இதற்கிடையே விசாரணை நடத்துவது தொடர்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டது. இதில் சபாநாயகரிடம் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. தற்போது கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா முடிவு செய்துள்ளது.

You'r reading வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் சட்டசபை கூட்டத்திற்கு பின் கேரள சபாநாயகரிடம் விசாரணை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை