கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் மூடிக் கிடந்த தியேட்டர்களை கடந்த 5ம் தேதி முதல் திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மட்டுமே தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காட்சிகளை நடத்தலாம் என்றும், எந்தக் காரணம் கொண்டும் இரவுக் காட்சிகளை நடத்தக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் 10 மாதங்களாக மூடிக் கிடந்ததால் கடும் நஷ்டத்தில் இருப்பதாகவும், இதை அரசு ஈடு கட்டினால் மட்டுமே தியேட்டர்களை திறக்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.
மேலும் தியேட்டர்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பதால் அதைத் திருப்பித் தரும் வரை புதிய படங்களை வழங்க முடியாது என்று சினிமா விநியோகஸ்தர்களும் கூறினர். இதனால் அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சினிமா தியேட்டர்களை திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள பிலிம் சேம்பர், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைத் துறையை சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சினிமா தியேட்டர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக பரிசீலிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.
இதையடுத்து தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். எந்தக் காரணம் கொண்டும் இரவுக் காட்சி நடத்தக் கூடாது என்று பினராயி விஜயன் கூறினார். அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர். தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து பிலிம் சேம்பர் நிர்வாகிகள் கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த வாரத்தில் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது.