சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதற்கு முன்பு நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் சிட்னியில் தொடங்கிய டெஸ்டில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து 338 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியாவால் 244 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. அந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 407 ரன்கள் என்ற மிகக் கடினமான வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களிலும், கேப்டன் ரகானே 5 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே கேப்டன் ரகானே கூடுதல் ரன் ஏதும் சேர்க்காமல் 5 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் புஜாரா உடன் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் கையில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும் இவர் மிக சிறப்பாக ஆடி 97 ரன்கள் குவித்தார். வெறும் 3 ரன்களில் இவருக்கு சதம் கை நழுவியது. புஜாரா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஹனுமா விஹாரியும், அஷ்வினும் ஜோடி சேர்ந்தனர். ஜடேஜாவுக்கு கையில் காயம் இருந்ததால் அவர் களமிறங்கவில்லை.
விஹாரி மற்றும் அஷ்வின் ஆகிய இருவராலும் மீதமுள்ள 135 ரன்களை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சிறப்பாக விளையாடக் கூடிய வேறு பேட்ஸ்மேன்களும் இல்லாததால் இந்தப் போட்டியில் இந்தியா கண்டிப்பாக தோல்வியடையும் என்றே கருதப்பட்டது. ஆனால் அஷ்வின், விஹாரி ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக, நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் இருவரையும் ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. இறுதியில் இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 39 ரன்களுடனும், விஹாரி 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.