நான் வரவே மாட்டேன்.. என்னை வேதனைப்படுத்தாதீர்கள்.. ரஜினி அன்பு வேண்டுகோள்..

by எஸ். எம். கணபதி, Jan 11, 2021, 11:44 AM IST

நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். தன்னை கட்டாயப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வேதனைக்குள்ளாக வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின்னர், கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி ஆரம்பிக்கும் நாள் குறித்து அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு அவர் சென்றிருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களும், பாஜக அனுதாபிகளும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதன் பின்பும் அவரை அரசியலுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதற்காகப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசி வருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது. நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதன்பின்பும், ரஜினியைக் கட்டாயமாக அரசியலுக்கு வர வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக அவரது ரசிகர்கள், சென்னையில் நேற்று(ஜன.10) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று(ஜன.11) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு.. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவிப் பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறி விட்டேன்.தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை