மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.கேரளாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 10 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் மலையாள சினிமா துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், கேரளா பிலிம் சேம்பர் உட்பட மலையாள திரைத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கத்தினரும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனைகளின் படி தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது.
ஆனால் உரிய நிவாரணம் கிடைக்காமல் தியேட்டர்களை திறக்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்களும், கேரள பிலிம் சேம்பரும் தெரிவித்தது.இதையடுத்து தியேட்டர்கள் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், பிலிம் சேம்பர் நிர்வாகிகள், சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் கடும் நஷ்டத்தில் இருப்பதாகவும், எனவே மின் கட்டணம், கேளிக்கை வரி, லைசென்ஸ் சலுகை வழங்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுக் கொண்டார். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூட்டத்தில் அவர் திரைத் துறையினருக்கு உறுதியளித்தார்.
இதையடுத்து தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதன் பின்னர் கேரள அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பது: இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து செய்யப்படும். தியேட்டர்கள் மூடப்பட்டுக் கிடந்த 10 மாதத்திற்கான மின்சார நிலை கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும். மீதமுள்ள தொகையைத் தவணைகளாகக் கட்ட அனுமதி அளிக்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தியேட்டர்கள் கட்ட வேண்டிய சொத்து வரியை மாத தவணைகளாகக் கட்டலாம். இது தவிர உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, பிலிம்ஸ் டிவிஷன், மின்சாரத் துறை உள்பட பல்வேறு லைசென்சுகளுக்கான காலாவதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் மற்றும் மலையாள திரைத் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.