மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கூட, டிரம்ப் மாதிரி ஆட்சியை விட்டு வெளியேறாமல் அடம் பிடிப்பார் என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எதிர்க்கட்சிகளைத் துச்சமாகக் கருதுவது, போராட்டங்கள், விமர்சனங்களை உதாசீனம் செய்வது மற்றும் மன்னராட்சி போல் ஆட்சி புரிவதில் இருவரும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் தோற்று ஜோ பிடன் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார். ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் கலவரம் செய்தனர். அந்த நிலையிலும் கூட, பாஜகவினர் பலரும் டிரம்ப்புக்கு ஆதரவாகவே பேசினர். தற்போது, தற்போது பாஜகவினர் டிரம்ப்பை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரியே மம்தா பானர்ஜியும் திமிராகச் செயல்படுபவர். சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார். அவரது கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, ஜனநாயகமே கிடையாது. அதனால்தான் அவரது கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள். மம்தாவின் மோசமான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் தோற்றாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். டிரம்ப் மாதிரியே ஆட்சியை விட்டு விலகாமல் அடம் பிடிப்பார்.இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்.