மகர ஜோதி தரிசனம் சபரிமலையில் பக்தர்கள் தங்க அனுமதிக்க கூடாது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

by Nishanth, Jan 12, 2021, 11:13 AM IST

ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை மறுநாள் (14ம் தேதி) பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. வழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் பல நாட்கள் முன்பே சபரிமலை பகுதியில் பரண் அமைத்துத் தங்குவது உண்டு. மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக உயரமான பகுதிகளில் பக்தர்கள் பரண் அமைப்பார்கள்.

இந்நிலையில் இவ்வருடம் இதேபோல மகர ஜோதி தினத்தன்று பக்தர்கள் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் தங்கவில்லை என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சபரிமலை மகர விளக்குப் பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தில் உள்ளன. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப விக்கிரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த திருவாபரணம் இன்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்படும். மகர விளக்குப் பூஜை நடைபெறும் 14ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த திருவாபரணம் சபரிமலை சமாதானத்தை அடையும். இதன் பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். 20ம் தேதி காலை கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்