மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.12) 48வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பாக நேற்று(ஜன.11) விசாரணைக்கு வந்தன.
அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்தை சரியாக கையாளவில்லை? இந்த போராட்டத்தில் ரத்தம் சிந்தப்படுவதையோ, வேறு சிரமங்களையோ எப்படி அனுமதிக்க முடியும்? யார் அதற்கு பொறுப்பு ஏற்பது? பேச்சுவார்த்தையில் இந்த பிரச்னை தீரும் வரை சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் நாங்கள் அதை(சட்டத்துக்கு தடை) செய்கிறோம். இந்தப் பிரச்னைக்கு இதில் அரசுக்கு என்ன கவுரவம் வேண்டியிருக்கு? என்று கூறினார்.
இந்நிலையில், இன்று(ஜன.12) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் நீண்ட வாதங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாயச் சங்கங்களின் சார்பில் ஆஜராகும் சீனியர் வக்கீல் துஷ்யந்த் தவே, இன்று வரவில்லை. வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க கமிட்டி அமைக்கும் நீதிமன்ற யோசனை குறித்து சங்கத்தினரின் கருத்து கேட்டு வருவதற்காக அவர் சென்று விட்டார். இந்த சூழலில், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கும் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.