மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜான் மைக்கேல் தான் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2006ம் ஆண்டு எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தார். அப்போது சுமார் 1 ஏக்கருக்கு மேல் அரசு நிலத்தை அவர் முறைகேடாக தனிநபர் ஒருவருக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டார். இந்த நிலம், பலர் கை மாறி கடைசியில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மாமியார் விமலாவின் கைகளுக்கு வந்தது. பின்னர் அவர் தன்னுடைய மகனுக்கு அந்த நிலத்தை வழங்கினார்.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா அதிகார துஷ்பிரயோகம் செய்து இந்த நிலத்தை விற்பனை செய்தார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஜெயக்குமார் ஹீரேந்து என்பவர் கர்நாடக லோகாயுக்தா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான தன்னுடைய புகாரை வாபஸ் பெறுவதாக கூறி ஜெயக்குமார் ஹீரேந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். முதல்வர் எடியூரப்பாவும் தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜான் மைக்கேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல், வழக்கை வாபஸ் பெற முடியாது என்று கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். அவர் தன்னுடைய உத்தரவில் கூறியது: முதல்வர் எடியூரப்பா தனக்கு எதிராக புகார் கூறியவருடன் ஒரு மோசமான தொடர்பு வைத்துள்ளார்.
அவர் மனசாட்சி இல்லாதவர். தர்மத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். எனவே அவருக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரணை செய்து வரும் லோகாயுக்தா போலீசும், தனி நீதிமன்றமும் மிக கவனமாக இருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விசாரணையில் தொய்வு வரக்கூடாது. இந்த ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது. நில விற்பனையில் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை வெளியே வரவேண்டும். எடியூரப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கியே புகார்தாரர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற முடிவு செய்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு நீதிபதி ஜான் மைக்கேல் கூறினார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு இதே ஜான் மைக்கேல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் போது தான் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.