இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.சர்மா ஒளி பிரதமராக உள்ளார். கடந்த 20 ஆம் தேதி அவரது உத்தரவின் பேரிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து நேபாள குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
கே.பி.சர்மா ஒளிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே பாராளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது காரணம் பிரசண்டா, ஏற்கனவே பிரதமராக இருந்தவர். தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் பிளவுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காட்மண்டுவில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினரிடயே பேசிய பிரசண்டா, இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே ஒளி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் என குற்றம் சாட்டினார்.பிரதமர் கே.பி.சர்மாஒளி, காட்மண்டுவில் தனது அலுவலகத்தில் இந்திய உளவுத்துறை ரா அமைப்பின் தலைவர் கோயலுடன் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அவர்கள் இருவர் தவிர வேறு யாரும் இல்லை. இந்த ஆலோசனைக்கு பின்னரே சர்மாஒளி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்திருக்கிறார் என்றும் பிரசண்டா தெரிவித்தார்.