கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கொரோனா காலத்திலும், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் முதல் இரண்டு நாளில் இந்தப் படம் ₹ 9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
கேரளாவில் பொதுவாகவே தமிழ்ப் படங்களுக்கு மலையாள படங்களுக்கு இணையாக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உட்பட தமிழின் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு மிக அதிகமாக உள்ளது.
சில சமயங்களில் மோகன்லால், மம்மூட்டி படங்கள் வெளியாகும் தியேட்டர்களை விட அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் படங்கள் வெளியாவது உண்டு. கடந்த வருடம் வெளியான பிகில் இங்கு மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து 10 மாதங்களாகக் கேரளாவில் மூடிக்கிடந்த தியேட்டர்கள் கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 13ம் தேதி முதல் தியேட்டர்களை திறப்பதற்கு முக்கிய காரணமே விஜய்யின் மாஸ்டர் படம் தான் என்றால் அது மிகையல்ல.
கேரளாவில் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ள போதிலும் கடந்த 10 மாதங்களாக அவை மூடப்பட்டுக் கிடந்தால் பெரும்பாலான தியேட்டர்களில் பராமரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் கடந்த 13ம் தேதி பராமரிப்பு பணிகள் முடிவடைந்த சுமார் 350 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. இந்த அனைத்து தியேட்டர்களிலும் விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.எந்த தியேட்டரிலும் ஒரு மலையாள படம் கூட ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனதால் அனைத்து தியேட்டர்களும் விழாக்கோலம் பூண்டன. படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அதுமட்டுமில்லாமல் 17ம் தேதி வரை அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது.
முதல் இரண்டு நாளில் வசூல் ₹ 9 கோடியைத் தாண்டி விட்டதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. கொரோனா காலத்திலும் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள இந்த சூழ்நிலையிலும் மாஸ்டர் படத்திற்கு வசூல் அதிகரிப்பது சினிமா விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் 10 மாதங்களுக்குப் பின்னர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் முதல் தான் சில மலையாள படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மாஸ்டர் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் மலையாள படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகும் என கருதப்படுகிறது.