ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. மேலும் சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த சாலை விபத்துகள் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, முன் வருடம் அதே 2 மாதங்களில் நடந்த மரணத்தை விட 27.5 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒடிஷா மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஒடிஷாவில் சாலை விபத்தில் அதிகரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாலை விதிகளை கடுமையாக்கவும், வாகன பரிசோதனையை அதிகரிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சோதனையை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் இங்குள்ள ராயகடா என்ற பகுதியில் போக்குவரத்து போலீசார் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அந்த பைக் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்தது. ஆர்சி புத்தகம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்பட அந்த வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களும் அந்த நபரிடம் இல்லை. மேலும் அந்த நபர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதையடுத்து அந்த பைக்கை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் கடுமையான அபராதம் விதிக்க தீர்மானித்தனர்.
இதன்படி நம்பர் இல்லாத குற்றத்திற்காக ₹ 5000, லைசன்ஸ் இல்லாததால் ₹ 5000, இன்சூரன்ஸ் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் ₹ 2000, ஹெல்மெட் போடாததற்கு ₹ ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை பதிவு செய்யாததால் வாகனம் விற்பனை செய்த டீலருக்கு ₹ 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தத்தில் அந்த பைக்குக்கு ₹1,13,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது அந்த பைக்கின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இதே ராயகடா பகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சி நடத்திய வாகன பேரணியில் கலந்து கொண்ட பாஸ்கர் ராவ் என்ற எம்.பி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு ₹ 500 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.