வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.. விவசாயிகள் பிடிவாதம்.. 9வது முறை பேச்சுவார்த்தை..

by எஸ். எம். கணபதி, Jan 15, 2021, 14:23 PM IST

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயச் சங்கங்கள் உறுதியாக உள்ளதால், 9வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.15) 51வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், சட்டங்கள் குறித்துப் பரிசீலிக்க 4 நிபுணர்கள் அடங்கிய குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. ஆனால், இந்த குழுவில் உள்ள 4 பேருமே அரசுக்கு ஆதரவாகவும், சட்டங்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு தருணங்களில் பேசியவர்கள் என்று கூறி, குழுவை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில், போராடும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தரப்பில் இன்று(ஜன.15) 9வது முறையாகப் பேச்சுவார்த்தை நடந்தது. வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார். விக்யான் பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண் சட்டங்களில் பிரிவு வாரியாக விவாதித்துத் தேவைப்பட்டால் திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் அதை ஏற்க மறுத்தனர். 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) நிர்ணயிக்க சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் அமைத்த நிபுணர் குழு வரும் 19ம் தேதியன்று மத்திய அரசு தரப்பிலும், விவசாயிகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆனால், அந்த குழுவை விவசாயிகள் புறக்கணிக்க உள்ளது.

You'r reading வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.. விவசாயிகள் பிடிவாதம்.. 9வது முறை பேச்சுவார்த்தை.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை