கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட இறுதியில் நடைபெற வேண்டிய 51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் தனுஷின் அசுரன் உள்பட 224 படங்கள் திரையிடப்படுகின்றன.இந்தியாவில் வருடந்தோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் புகழ் பெற்ற பல சினிமா கலைஞர்கள் வருவது உண்டு. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும்.
ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக திரைப்பட விழா ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 51வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இதில் தனுஷின் அசுரன் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 224 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவின் பிரசித்தி பெற்ற பெங்காலி இயக்குனர் சத்யஜித் ரேயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவ்வருட விழா அவரது பெயரில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சத்யஜித்ரேயின் பிரசித்திபெற்ற படங்களான பதேர் பாஞ்சாலி, சாருலதா, சோனார் கெல்லா, கரே பெய்ரே, சத்ரஞ் கே கிலாடி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
சமீபத்தில் மரணமடைந்த பிரபல தமிழ் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் மறைந்த நடிகர், நடிகைகளான சௌமித்ரா சாட்டர்ஜி, இர்பான் கான், ரிஷி கபூர், சாட்விக் போஸ்மான் உள்பட சினிமா கலைஞர்களுக்கு இந்த விழாவில் அஞ்சலி செலுத்தப்படும்.விழாவில் மொத்தம் 224 படங்கள் திரையிடப்படுகின்றன. அர்ஜெண்டினா இயக்குனரான பாப்லோ செசாரா சர்வதேச திரைப்படங்களுக்கான ஜூரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜூரி குழுவில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், இலங்கையைச் சேர்ந்த பிரசன்னா விதனகே, ஆஸ்திரியாவைச் சேர்ந்த அபூபக்கர் ஷோகி மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த ருபய்யா உசேன் ஆகியோர் உள்ளனர்.
டேனிஷ் இயக்குனரான தாமஸ் வின்டர்பெர்கின் அனதர் ரவுண்டு என்ற படம் தான் விழாவில் முதல் படமாகத் திரையிடப்படுகிறது. போட்டிப் பிரிவில் போர்ச்சுகல், டென்மார்க், பிரான்ஸ் உள்பட நாடுகளைச் சேர்ந்த 15 படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படத்திற்கு ₹ 40 லட்சத்துடன் தங்கமயில் விருது வழங்கப்படும். கடும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி திரைப்பட விழா நடத்தப்படுகிறது. 2,500 பேருக்கு மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள முடியும். மற்றவர்கள் ஆன்லைனிலும் படங்களைப் பார்க்கலாம்.