பிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள்

by Nishanth, Jan 16, 2021, 11:24 AM IST

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. லபுஷேனின் அற்புத சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. அவர் 108 ரன்களில் நடராஜனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் டிம் பெய்ன் அரை சதம் அடித்தார். அவர் 50 ரன்களில் ஷார்துல் தாக்கூரின் பந்தில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 47 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும், ஸ்மித் 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் உள்பட முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், புதுமுக பந்து வீச்சாளர்களான சிராஜ், நடராஜன், ஷார்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

இவர்களது பந்துவீச்சைக் கூட ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. அரங்கேற்ற வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தனர். மற்றொரு இளம் வீரரான ஷார்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.இதன் பின்னர் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆனால் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மான் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 44 ரன்களில் லியோனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு கேப்டன் அஜிங்கியா ரகானே, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அப்போது இந்தியா 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 307 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

You'r reading பிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை