கேரளாவில் உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மையம்: அடுத்த மாதம் முதற்கட்ட பணி தொடக்கம்.!

by Sasitharan, Jan 18, 2021, 20:01 PM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டூரில் யானை மறுவாழ்வு மையம் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் உலகின் மிகப்பெரிய யானைகள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமையவுள்ளது. இந்த பராமரிப்பு மையத்திற்கு வரும் யானைகளுக்கு காட்டில் இருப்பது போலவே இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த யானை மறுவாழ்வு மையத்தின் முதல் கட்டம் வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும். கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியுதவியுடன் ரூ .108 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 16 யானைகள் உட்பட 50 யானைகளை தங்க வைக்கும் வசதி இந்த மையத்தில் உள்ளது. இந்த திட்டம் மூலமாக நெய்யர் அணையில் பல்வேறு நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பு அணைகள் அமைக்கப்படுவதோடு, 176 ஹெக்டேர் வனப்பகுதிகளில் பரந்து கிடக்கும் மையத்தில் யானைக் கன்றுகளை பராமரிப்பதற்கான சிறப்பு வசதிகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கான ஒரு பெரிய சமையலறை, உணவளிக்க ஒரு விசாலமான தனி பகுதி மற்றும் யானைகளை பாதுகாப்பான தூரத்தில் பார்க்க பொதுமக்களுக்கு வசதி ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், யானை அருங்காட்சியகம், சூப்பர் சிறப்பு வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனை, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையம், நுழைவு பிளாசா, நிர்வாக அலுவலகம், பார்வையாளர்களுக்கான பார்க்கிங், சிற்றுண்டிச்சாலை, குடிசைகள், கழிப்பறை மற்றும் யானை பார்க்கும் வசதி என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்தவுடன், கோட்டூர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறும், வெளிநாட்டிலிருந்து 50,000 சுற்றுலாப் பயணிகள் உட்பட 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முடிந்ததும் ஒவ்வொரு நாளும் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவர். இந்த திட்டம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அருகிலுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு மையத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading கேரளாவில் உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மையம்: அடுத்த மாதம் முதற்கட்ட பணி தொடக்கம்.! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை