பூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி

by Nishanth, Jan 20, 2021, 18:19 PM IST

இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது.இந்தியாவின் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி வெற்றிகரமாக நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த தடுப்பூசி தொடர்பாக வேறு எந்த புகார்களும் வரவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசியை நம்முடைய அண்டை நாடுகளான மாலத்தீவு, பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகள் வாங்கத் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக இந்த 6 நாடுகளும் இந்திய அரசுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் முதல் கட்டமாக இன்று பூடான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சிரம் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பு மருந்தான கோவிஷீல்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அந்நாட்டின் உயர் அதிகாரிகள் முறைப்படி பெற்றுக் கொண்டனர்.விரைவில் பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுதவிர ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் இருந்து தடுப்பு ஊசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தென்கொரியா, கத்தார், சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading பூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை