பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.பிரபல மலையாள நடிகை கடந்த 4 வருடங்களுக்கு முன் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கார் டிரைவராக பணிபுரிந்து சுனில் குமார் என்பவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்குப் பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நடிகர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போதும் சிறையில் தான் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விபின் லால் என்பவர் அப்ரூவராக மாறினார். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் திலீப் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி ஹனி வர்கீஸ், அப்ரூவராக மாறிய விபின் லாலை கைது செய்து இன்று ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் விபின் லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளனர். அப்ரூவராக மாறிய விபின் லாலைத் தான் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர், திலீப்புக்கு ஆதரவாகச் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக எம்எல்ஏவின் உதவியாளரான பிரதீப் குமாரை போலீசார் கைது செய்தனர்.