இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.கடந்த 1997ல் ஏர் போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்துத் தான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் இந்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இத்தனை சிறப்பம்சங்களா என அனைவரும் வியந்தனர்.
ஆனால் படத்தில் காண்பித்ததை விடப் பிரமாண்டமான வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன. அது பழைய கதை...... இன்னும் அதி நவீன வசதிகளுடன் 5.3 பில்லியன் டாலரில் புதிய ஏர்போர்ஸ் ஒன் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. அதில் யாருமே நினைத்துக் கூட பார்க்காத பல வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 67 வருடங்களுக்கு முன் அதாவது 1953ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஐசனாவர் சென்ற விமானத்தின் அதே வழித்தடத்தில் லாக்ஹீட் என்ற நிறுவனத்தின் விமானம் வந்தது. நிமிட நேரத்தில் இரு விமானங்களும் மோதும் அபாயம் உருவானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் பின்னர் தான் அமெரிக்க அதிபருக்காக ஒரு பிரத்தியேக விமானம் ஏர் போர்ஸ் ஒன் என்ற பெயரில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.அப்போதிலிருந்து பல நிறுவனத்தின் விமானங்கள் இந்த ஏர்போர்ஸ் ஒன்னுக்காக வடிவமைக்கப்பட்டன.
இந்நிலையில் 1990லிருந்து போயிங் விசி 25 ஏ என்ற ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்கள் அமெரிக்க அதிபர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அமெரிக்க அதிபர்களின் அரசு இல்லமான வெள்ளை மாளிகையில் என்னென்ன வசதிகள் இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே வசதிகள் இந்த விமானத்தில் இருக்கும். எனவே தான் இந்த ஏர் போர்ஸ் ஒன் விமானம் பறக்கும் வெள்ளை மாளிகை என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 747 எஸ் விமானத்திற்குப் பதிலாகப் புதிதாக 747- 8i விமானத்தை வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த விமானம் கிட்டத்தட்ட 30 வருடங்களாக 5 அமெரிக்க அதிபர்களுக்காகச் சேவை செய்துள்ளது. விசி 25 பி என்ற இந்த புதிய ஜெட் விமானம் அடுத்த தலைமுறை விமானமாகக் கருதப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட ஏர் போர்ஸ் ஒன் விமானங்களை விட இது மிகப் பெரியதாகும்.இந்த விமானத்திற்கு 5.3 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இது உண்மையான விலை அல்ல என்றும் கூறப்படுகிறது. இதன் உண்மையான விலை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அதிபராக இருந்த காலத்திலேயே இந்த புதிய விமானத் திட்டம் குறித்துப் பேசப்பட்டது. அப்போது இந்த விமானத் திட்டத்திற்கான தொகையை 4.4 பில்லியன் டாலரிலிருந்து 3.9 பில்லியன் டாலராக அவர் குறைத்தார். இந்த புதிய விசி 25 பி விமானத்திற்கான 1 லட்சம் பக்கங்கள் கொண்ட உரிமையாளர் கையேட்டை போயிங் நிறுவனம் தயாரிக்கும் என்று அமெரிக்க விமானப்படை கடந்த வருடம் தெரிவித்தது. ஆனால் இந்தக் கையேடு 2025 ஜனவரியில்மட்டுமே தயாராகும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் பயன்படுத்திய விமானங்களை விட அதிக சிறப்பம்சங்கள் இந்த புதிய விமானத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்துமே அடுத்த தலைமுறை இயந்திரங்கள் ஆகும். இவை அதிக எரிபொருள் திறன் கொண்டவையாகும். இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட விமானங்களை விட இது அளவில் பெரிதாக இருந்தாலும் பயணிகள் கொள்ளளவு குறைவாகும். பழைய விமானங்களில் அதிகபட்சமாக 100 பேர் வரை செல்லலாம். ஆனால் புதிய விமானத்தில் 71 பயணிகள் மட்டுமே செல்ல முடியும். விசாலமான அதிபர் அலுவலகம், கூடுதல் அதி நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் படுக்கை அறைகள் ஆகியவை இருப்பதால் தான் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கான பணிகள் அப்போது அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனின் காலத்தில் தொடங்கப்பட்டது. அந்த விமானத்தை 1990ல் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தான் முதலில் பயன்படுத்தினார். இதேபோல டிரம்ப் காலத்தில் இந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிய விமானத்தில் முதன் முதலாகப் பயணம் செய்யும் வாய்ப்பு தற்போதைய புதிய அதிபர் ஜோ பைடனுக்கு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானம் 2024ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.