டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள சுப்மன் கில்லுக்கு இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் உதவியுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. அணியின் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருந்தபோது, இந்திய அணி இளம்வீரர்களை வைத்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்தியா திரும்பிப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், இப்போதுதான் நிம்மியா இருக்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடியது பெருமையாக இருக்கிறது. ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தது. ஒவ்வொரு இன்னிங்ஸ் ஆட ஆட நம்பிக்கை வந்துவிட்டது. அணியின் வெற்றிக்குப் பங்களித்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடர், நான் ஒரு நல்ல கிரிக்கெட்டராக உருவெடுப்பதற்கான, களமாக அமைந்தது. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நன்றாக செட்டிலாகி இருந்தேன். அதனால், சதம் அடித்திருக்க வேண்டும்; சதம் அடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தொடர்ந்து இதேபோல விளையாட வேண்டும் என்பதுதான் என் அடுத்த இலக்கு. ஏனெனில், என் மீது எதிர்பார்ப்பு இருக்கும்.
இங்கிலாந்து தொடர் எனக்கு முக்கியமான தொடர். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்களை எதிர்கொள்வது சவாலான விஷயம். ஆனால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன், யுவராஜ் உடன் கேம்ப்பில் பயிற்சி செய்தது பயனுள்ளதாக இருந்தது. அந்த கேம்ப்பில், அவர் முகத்துக்கு நேராக வீசப்படும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பயிற்சி அளித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஷார்ட் பால்களை, வேறு வேறு கோணங்களில் இருந்து வீசினார். இது ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ரொம்பவே உதவியாக இருந்தது என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.