இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருப்பது தான் இதற்கு காரணமாகும்.
இதனால் இந்தியாவிடமிருந்து இந்த தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் போட்டிப் போட்டு வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டு விண்ணப்பித்துள்ளன. கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலுக்கு இந்தியா இதுவரை 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது. இந்த உதவிக்குப் பிரேசில் அதிபர் இந்தியாவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதேபோல நம் அண்டை நாடுகளான மியான்மர், நேபாளம், பூடான் உள்படப் பல நாடுகளுக்கும் ஏற்கனவே மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பு மருந்து உடனடியாக பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: தடுப்பூசி எப்போது பொது சந்தையில் கிடைக்கும் என்று இப்போது கூறமுடியாது. அடுத்த 7 முதல் 9 மாதங்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் அவசர தேவைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு நம் நாட்டிலோ, வெளி நாட்டிலோ சந்தை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அனைத்து ஆய்வக பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே பொது சந்தையில் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் விரைவில் அது குறித்த முழு விவரங்களையும் அரசிடம் அளிப்பார்கள். மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதைப் பரிசீலித்து அங்கீகாரம் வழங்கும். 3வது கட்ட ஆய்வக பரிசோதனைக்குப் பின்னரே இறுதி அங்கீகாரம் வழங்கப்படும் என்று கூறினார்.