பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நாளை நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியில் பங்கேற்க தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரில் விவசாயி ஒருவர் இயக்கி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட கோரி மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்கிடையே, புதிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாளை ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் தலைநகர் டெல்லி சென்று பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விவசாயிகள், தங்கள் டிராக்டர்களுடன் உத்திரபிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காஜிபூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நாளை பேரணியில் பங்கேற்பதற்காக தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரில் டெல்லிக்கு செல்கிறார். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரிவர்ஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரிவர்ஸ் கியரில் டெல்லி செல்வதாக விவசாயி தெரிவித்துள்ளார். தற்போது, விவசாயின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.