பல வருட சந்தேகம் விலகுமா?: ராமர் பாலம் குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

by Sasitharan, Jan 25, 2021, 19:10 PM IST

ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலத்தின் தோற்றம், வயது குறித்து கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம்-இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. சுமார் 46 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசன் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.

இருப்பினும், ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அறிவியல் ஆராய்ச்சிக்காக ராமர் பாலத்தை ஆய்வு செய்ய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசிடம் அனுமி கோரியிருந்தனர்.

இந்நிலையில், ராமர் பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக, கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் சிந்து சாதனா அல்லது சிந்து சங்கல்ப் ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நீருக்கடியில் வண்டல் மண் மாதிரிகள், பாலத்தில் உள்ள பழமையான கற்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அவற்றின் வயதை ரேடியோமெட்ரிக் தொழில்நுட்ப முறையில் கணக்கிடப்பட உள்ளது. இந்த ஆய்வு வெற்றியடைந்தால் ராமர் பாலம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது.

You'r reading பல வருட சந்தேகம் விலகுமா?: ராமர் பாலம் குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை