கேரளாவை வாட்டும் கடும் குளிர் தென்மலையில் மைனஸ் 3, மூணாறில் மைனஸ் 2 டிகிரி

by Nishanth, Jan 28, 2021, 13:48 PM IST

கேரளாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்த வருடம் முதன் முதலாக தென்மலையில் மைனஸ் 3 டிகிரியும், மூணாறு உட்பட சில இடங்களில் மைனஸ் 2 டிகிரியாகவும் வெப்பநிலை குறைந்தது. கேரளாவில் தட்பவெப்பநிலை மாற்றம் பெரும்பாலும் மாறாமல் சரியான காலகட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும். வருடந்தோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். பின்னர் அக்டோபர் பாதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் டிசம்பர் பாதி வரை தொடரும். டிசம்பர் பாதியில் குளிர்காலம் தொடங்கி விடும். ஜனவரி இறுதி வரை குளிர்காலம் இருக்கும். சில வருடங்களில் பிப்ரவரி முதல் வாரம் வரை குளிர் வாட்டும். இதன் பிறகு மெதுவாக கோடை காலம் தொடங்கும். பெரும்பாலும் கேரளாவில் இந்த கால நிலைகளில் மாற்றங்கள் வருவதில்லை.

ஆனால் கடந்த வருட இறுதியிலும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் காலநிலையில் லேசான மாற்றங்கள் காணப்படுகின்றன. வழக்கமாக டிசம்பர் பாதிக்கு பின்னரும், ஜனவரியிலும் அதிகமாக மழை பெய்யாது. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மற்றும் இந்த ஜனவரியில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்தது. ஜனவரியில் வழக்கமாக அதிகபட்சமாக 7 மில்லி மீட்டர் மழை மட்டுமே கேரளாவில் பெய்யும். ஆனால் இந்த ஜனவரியில் 105 மில்லி மீட்டர் மழை பெய்தது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் மழை அதிகளவு பெய்ததால் குளிர்காலம் தொடங்குவதற்கு தாமதமானது. கடந்த சில நாட்ககளாகத் தான் கேரளாவில் கடுமையாக குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக தமிழக எல்லையில் உள்ள தென்மலை மற்றும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. தென் மலையில் நேற்று மைனஸ் 3 டிகிரியாக வெப்பநிலை குறைந்தது.

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, மாட்டுப்பட்டி, அமைதி பள்ளத்தாக்கு, செவன்மலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று வெப்பநிலை வெகுவாக குறைந்தது. மூணாறு, அமைதி பள்ளத்தாக்கு, மாட்டுப்பட்டி மற்றும் செண்டுவறை ஆகிய பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக இருந்தது. லட்சுமி என்ற இடத்தில் மைனஸ் 1 டிகிரியாகவும், நல்லதண்ணி பகுதியில் பூஜ்ஜியம் டிகிரியாகவும் இருந்தது. குறிப்பாக தோட்டப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மேல் ஐஸ் கட்டிகள் குவிந்து கிடப்பதை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த கடும் குளிர் கால நிலையையும் அனுபவிப்பதற்காக மூணாறில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

You'r reading கேரளாவை வாட்டும் கடும் குளிர் தென்மலையில் மைனஸ் 3, மூணாறில் மைனஸ் 2 டிகிரி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை