கணவனை மனைவி கொலை செய்தாலும் அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு விசித்திர உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் தர்சேம் சிங். இவரது மனைவி பல்ஜீத் கவுர். தர்சேம் சிங் ஹரியானா மாநில அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு இவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தர்சேம் சிங் மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி பல்ஜீத் கவுருக்கு ஓய்வூதியம் கிடைத்து வந்தது.
இந்நிலையில் போலீசின் தீவிர விசாரணையில் தர்சேம் சிங்கை கொலை செய்தது அவரது மனைவி பல்ஜீத் கவுர் தான் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அம்பாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்ஜீத் கவுருக்கு 6 வருடம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. கணவன் கொல்லப்பட்ட வழக்கில் மனைவி பல்ஜீத் கவுருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 2011 முதல் ஹரியானா அரசு அவருக்கான ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து பல்ஜீத் கவுர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவனை மனைவி கொலை செய்தாலும் அவருக்கு வழங்கி வரும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என ஒரு விசித்திரமான உத்தரவை பிறப்பித்தது. பொன் முட்டையிடும் வாத்தை யாரும் கழுத்தை நெறித்து கொல்ல மாட்டார்கள். ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்காக வழங்கப்படுவதாகும். எனவே கணவனை மனைவி கொலை செய்தாலும், மனைவி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டாலும் கண்டிப்பாக அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியரின் மனைவி மறுமணம் செய்தாலும் அவருக்கு ஓய்வூதியம் பெற தகுதி உண்டு. இவ்வாறு உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.