டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுப்பதற்காக திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பெரும் தடுப்புகளை போலீசார் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து, ஜன.26ம் தேதியன்று டெல்லியில் விவசாயிகள் மிகப் பெரிய அளவில் டிராக்டர்கள் பேரணியை நடத்தினர். குடியரசு தினப் பேரணி முடிந்த பின்பு டிராக்டர் பேரணியை நடத்த போலீசார் அனுமதியளித்திருந்த நிலையில், சில இடங்களில் முன்கூட்டியே பேரணியைத் தொடங்கினர். அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் டிராக்டர்கள் சென்றன. டெல்லி போலீசார் பேரணியைத் தடுத்த போது, விவசாயிகள் டிராக்டர்களால் சாலைத் தடுப்புகளை மோதி உடைத்துக் கொண்டு சென்றனர். மேலும், செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் ஏறி கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதனால் பெரும் கலவரம் வெடித்தது.
ஆனால், பாஜக, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள்தான் விவசாயிகளுடன் போராட்டத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர் என விவசாயிகள் கூறினர். இந்நிலையில், செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக இது வரை 44 எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், 128 விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைகளில் போலீசார் மிகப் பெரிய சாலைத் தடுப்புகளை வைத்துள்ளனர். திக்ரி, காசிப்பூர் போன்ற பகுதிகளில் மிக ஆபத்தான இரும்புக் கம்பிகளுடன் கூடிய தடுப்புகள், செங்குத்தாக நடப்பட்ட ஆணிகளுடன் கூடிய தடுப்புகள் பலவற்றையும் வைத்துள்ளனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம், இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாக்காரன் நமது அருணாசலப் பிரதேசத்திற்குள் ஊடுருவி கிராமமே அமைத்துள்ளான். அங்கெல்லாம் இப்படித் தடுப்புகளைப் போடவில்லை. நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைத் தடுக்க இத்தனை தடுப்புகளா? என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.