தமிழ்நாடு சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, வரும் மே மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. கொரோனா பரவல் அச்சம் இன்னும் முழுமையாக நீங்காததால், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியிருக்கிறது. கோட்டையில் சட்டசபை வளாகம் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்பதால், கடந்த முறை போல் சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே இம்முறையும் கூட்டத் தொடரை நடத்த ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், அதைச் சபாநாயகர் தனபால் தமிழில் மொழிபெயர்த்து வாசிப்பார்.
இதைத் தொடர்ந்து இன்று சபை ஒத்தி வைக்கப்படும். பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது என்று சபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.முன்னதாக, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஆட்சி மாறினால் அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்த முடியாது என்பதால், சில சமயங்களில் கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை.இதற்கிடையே, கொரோனா காலத்து பிரச்சனைகள், வேளாண்மை சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், பேரறிவாளன் விடுதலை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.