மத்திய அரசால் கடந்தாண்டு பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்பட்ட போது, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் SVAMITVA என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாழ்வாதார மற்றும் விளைநிலங்களைத் தொழில்நுட்ப ரீதியில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கான ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அந்த ஆவணங்களை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுதல் தொடர்பாக இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
SVAMTIVA என்றால் Survey of Villages Abadi and Mapping with Improvised Technology In Village Areas என்ற விளக்கத்துடன், அதற்கான இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இந்தியாவில் உள்ள 114518 கிராமங்களிலும் நடைமுறைப் படுத்த, அந்தந்த மாநிலங்களில் உள்ள வருவாய்த் துறை மூலம் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வேளாண்மை பட்ஜெட்டின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட்டினை மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சமர்ப்பித்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும். இந்த கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடுகள் மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் இந்த பட்ஜெட் தான் இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும்.
இதில் வேளாண்மைத் துறையின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் SVAMITVA ஆகும். நேற்று வெளியான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டதால், இந்த பட்ஜெட் நகலை வெகுஜன மக்களும் பார்க்கும் வகையில் UNION BUDGET எனும் செயலியில் வெளியிடப்பட்டது. இதில் இந்த திட்டத்தின் பெயரை SVAMITVA என்பதற்குப் பதிலாக SWAMITVA என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது. அரசால் வெளியிடப்படும் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு திட்டத்தின் பெயரைத் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது, அவர்களின் நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை இன்னும் அதிகமாக்குவதாகவே உள்ளது.