மத்திய அரசிடமிருந்து புதிதாக ஆர்டர் எதுவும் கிடைக்காததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சிரம் இன்ஸ்டிடியூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பு மருந்துகள் சிரம் இன்ஸ்டியூட்டின் கிட்டங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு மருந்துகள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் போடப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் குறிப்பிடும் அளவுக்குப் பக்க விளைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் சர்வதேச அளவில் இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகம் கண்டுபிடித்த இந்த தடுப்பூசி முதல் டோசிலேயே 67 சதவீதம் வரை கொரோனா பரவலைத் தடுக்கும் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை 2 டோஸ் வழங்க வேண்டும். முதல் டோஸ் கொடுத்து 28 நாட்களுக்குப் பின்னர் தான் இரண்டாவது டோஸ் கொடுக்க வேண்டும். இங்கிலாந்தில் 6 முதல் 12 வாரங்களுக்கு இடையே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிகளை வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றன. பிரேசில், சவுதிஅரேபியா, மியான்மர், பூடான், நேபாளம் உட்பட ஏராளமான நாடுகளுக்கு இந்த கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்தவாரம் பிரேசில் நாட்டுக்கு மட்டும் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து புதிய ஆர்டர்கள் எதுவும் கிடைக்காததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சிரம் இன்ஸ்டிடியூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் கிட்டங்கியில் 5 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து புதிய ஆர்டர்கள் கிடைத்தால் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பின்தங்கியுள்ள நாடுகளுக்காக 110 கோடி தடுப்பூசி தயாரிக்க சிரம் இன்ஸ்டியூட் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அஸ்ட்ரா செனக்கா மற்றும் நோவாக்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்த தடுப்பூசியைத் தயாரிப்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.