சசிகலா வரும் 8ம் தேதி சென்னை வருகிறார் என்றும் அவருக்கு அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் வரவேற்பு அளிக்க வேண்டுமென்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்கு செல்லும் போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். அதிமுக கொடியையோ, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தையோ சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்.
அதற்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதில் அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார். இதில் ஒன்றும் சர்ச்சை இல்லை. சசிகலா தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்என்றார். இதன்பின்னர், சசிகலா வரும் 7ம் தேதி சென்னை திரும்புவார் என்றும், அவருக்கு ஓசூர் முதல் சென்னை வரை தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், சின்னம்மா(சசிகலா) பிப்.8ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார். அந்த நாளை நாம் திருவிழா போல் கொண்டாடாத் தயாராகி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவரை வரவேற்கக் காத்திருக்கிறார்கள். நம்முடைய வரவேற்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாவற்றிலும் யாருக்கும், எந்தவித இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடகாவில் உள்ள நமது தொண்டர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதே போல், ஓசூர் முதல் சென்னை வரை வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு சின்னம்மாவை வரவேற்கத் தயாராகி வரும் செய்திகள் வருகின்றன. அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.