சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பீகாரில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை ஒடுக்கும் வகையில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தப் பீகார் போலீஸ் தீர்மானித்துள்ளது.
இது குறித்து பீகார் மாநில டிஜிபி எஸ்.கே. சிங்கால் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில் கூறியிருப்பது: அரசுக்கு எதிராகச் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா ஆகியவற்றில் ஈடுபட்டு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு இனி அரசு வேலையும், பாஸ்போர்ட்டும் கிடைப்பது மிகவும் சிரமமாகி விடும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகளும் கிடைக்காது. வன்முறை ஏற்படும் வகையில் போராட்டங்களில் யாராவது ஈடுபட்டாலோ, சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தாலோ அவர்களது நன்னடத்தை சான்றிதழில் அது எதிரொலிக்கும்.
எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அரசு வேலையோ, பாஸ்போர்ட்டோ கிடைப்பது சந்தேகம் தான்.ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அரசு ஒப்பந்தப் பணிகள், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு பங்குகளுக்கான ஏஜென்சி, அரசு உதவிகள், வங்கிக் கடன் போன்றவை பெறுவதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு பீகார் டிஜிபி எஸ்.கே. சிங்கால் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பீகார் அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சர்வாதிகாரிகளான முசோலினி மற்றும் ஹிட்லருடன் போட்டி போடுகிறார். அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று கூறுகின்றனர். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். பீகார் அரசைப் போலவே உத்தரகாண்ட் அரசும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.