இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை சென்னையில் தொடங்குகிறது

by Nishanth, Feb 4, 2021, 16:19 PM IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்தியா அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த இரு அணிகளுமே முந்தைய டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை அந்நாட்டு மண்ணில் 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணி இலங்கையை அந்நாட்டு மண்ணில் 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த இரு அணிகளுமே தன்னம்பிக்கையுடன் நாளைய டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும்.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இந்த அணியில் பெரும்பாலான வீரர்களும் சிறப்பான ஆட்டத் திறனுடன் உள்ளனர்.

எனவே கடைசி 11 வீரர்களைத் தேர்வு செய்வது பெரும் சவாலாக இருக்கும். பெரும்பாலும் 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்களில் பும்ரா, அஷ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது. இவர்கள் தவிர முகம்மது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் கடைசி 2 இடத்திற்குப் போட்டிப் போடுகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளத்தைப் பொறுத்தே இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தால் 3 வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தால் 3 சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் சேர்க்கப்படுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இந்திய அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குவார்கள். இதன் பின்னர் புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மத்திய வரிசையில் விளையாடுவார்கள். இந்திய அணி உலகிலேயே சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்டதாகும். மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் இவர்கள் அனைவரும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தற்போது நல்ல பார்மில் உள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு இரட்டை சதமும், ஒரு சதமும் அடித்தார். அவர் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உண்டு. இது தவிர பட்லர், பென் ஸ்டோக்ஸ், பர்ன்ஸ் உள்படச் சிறந்த பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து அணியில் உள்ளனர்.

பந்துவீச்சில் ஆண்டர்சன் தற்போது நல்ல பார்மில் உள்ளார். இவர் இதுவரை டெஸ்ட் போட்டியில் 606 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். இவர் தவிர ஜெப்ரி ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய சிறப்பான பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளனர். டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

You'r reading இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை சென்னையில் தொடங்குகிறது Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை