வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என திட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்று ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணி செய்யும் நிலையில் உள்ளனர். இது இன்னும் நீடித்து வருகிறது.
இதனால், இந்தியாவில் இனி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை விரைவில் மத்திய அரசு அமல்படுத்த போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா பேசியுள்ளார்.
இது குறித்து அபூர்வா சந்திரா கூறுகையில், இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளத வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறைதான் தொடர்கிறது. ஆனால், ஒரு நாள் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்ய வேண்டும். அதுவே நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 5 நாட்களும், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும்.
இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும், மத்திய அரசின் இந்த 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், கொரோனா காலத்தில் வேலை இல்லாமல்போனது போல் இன்னும் வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.