இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் ரூ.1 க்கு உணவு வழங்கும் உணவகத்தை திறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடந்த சில வருடங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வரும் கவுதம் காம்பீர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய சேவையை தொடங்கியுள்ளார்.
தனது சொந்த தொகுதியான கிழக்கு டெல்லி தொகுதியில் காந்தி நகர் மார்க்கெட்டில் முதல் முதலாக ரூ.1-க்கு உணவு வழங்கும் ஜன் ரசாய் என்று உணவகத்தை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கினார். தற்போது இந்த உணவகம், நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவுதம் காம்பீர் கூறுகையில், நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ அல்லது தர்ணா நடத்தவோ அல்ல. என்னிடம் இருப்பவையை கொண்டு சமுதாயத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். ஒரு உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் இதனை செய்கிறேன். இதில் என்னுடைய பங்குடன் முடிந்துவிடாமல், ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லி மாநில பாஜக பொறுப்பாளர் பாண்டா கூறுகையில், பல மாநிலங்களில் உள்ள அரசுகள் மானிய வகையில் உணவகங்களை திறந்துள்ளதை நாம் அறிவோம். ஆனால், தற்போது, காம்பீர் செய்திருப்பது மிகவும் வித்தியாசமான முயற்சி. அதற்காக அவரை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.