சுகாதாரத் துறை ஊழியரால் பலாத்காரத்திற்கு இரையான மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 23 வார கர்ப்பத்தை கலைக்க நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு 25 வயதில் ஒரு மகள் உண்டு. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இளம்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த இளம்பெண் கர்ப்பிணி ஆனார். இந்நிலையில் தன்னுடைய மகளின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நாக்பூர் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் ஷுக்ரே மற்றும் அவிநாஷ் கரோட்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண்ணின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து இது தொடர்பாக மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த நீதிபதிகள் 23 வாரம் ஆன இளம்பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. 20 வாரத்திற்கு மேல் ஆன கர்ப்பத்தை கலைப்பதற்கு பிரசவத்தின் மூலம் குழந்தை அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஒன்றுக்கு மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழு பரிந்துரைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். மேலும் கருவை கலைத்த பின்னர் டிஎன்ஏ பரிசோதனைக்காக அந்த கருவை 1 வருடம் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.